விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. தயாநிதி மாறன் முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். சிபிஐ
மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது, BSNL நிறுவனத்துக்கு சொந்தமான 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தனது சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டிவி நிறுவனத்துக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். இந்நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி சி.பி.ஐ. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
BSNL நிறுவனத்தில் இருந்து முறைகேடாக இணைப்புகள் பெறப்பட்டதாக கடந்த 2013ஆம் ஆண்டில் தயாநிதி மாறன், BSNL முன்னாள் பொது மேலாளர் பிரம்மநாதன் மற்றும் தயாநிதி மாறனின் சகோதரர் தொலைக்காட்சி நிறுவன நிர்வாகிகள் ஆகியோர் மீது டெல்லி சி.பி.ஐ. போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் கவுதமன், மற்றும் தொலைக்காட்சியின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் கண்ணன், எலெக்ட்ரீஷியன் ரவி ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் கடந்த ஜனவரி மாதம் கைது செய்து விசாரணை செய்தனர்.
இந்நிலையில், தயாநிதி மாறனை ஜூலை 1ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சி.பி.ஐ. உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 1ஆம் தேதி 8 மணி நேரமும், 2, 3ஆம் தேதிகளில் 6 மணி நேரமும் டெல்லியில் வைத்து தயாநிதிமாறனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், “தயாநிதி மாறனிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்திருப்பதாகவும் இன்னும் அவரிடம் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும், தேவைப்பட்டால் மீண்டும் தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறனிடம் விசாரணை நடத்தப்படும்” என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி சி.பி.ஐ. சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ”தயாநிதிமாறன் டெல்லியில் நடந்த விசாரணையின்போது ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே, அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியிருப்பதால், அவருக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.