செல்போன் வைத்திராதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு இன்று செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அலுவலகங்களுக்கு வேலைக்கு வரும் போதும், வேலை முடிந்து திரும்பும் போதும் பலர் ‘ஹெட்போன்’ மூலம் பாடல் கேட்டுக்கொண்டே செல்கிறார்கள்.
ஒரு சிலர் சார்ஜர் போட்டுக்கொண்டே செல்போனில் பேசுவார்கள். இது போன்ற நேரங்களில், பலமுறை செல்போன் பேட்டரி அளவுக்கு அதிகமாக சூடாகி வெடித்துச் சிதறி இருக்கிறது.
இதே போல வியாசர்பாடியில் இரவு முழுவதும் சார்ஜர் போடப்பட்ட செல்போன் வெடித்து சிதறி தீப்பிடித்து 2 பேர் பலியாகிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
செல்போன் பயன்படுத்தும் பலர் அதனை எப்படி கையாள்வது என்று தெரியாமலேயே சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.
இது தொடர்பாக செல்போன் கடை வைத்திருக்கும் ஆவடியை சேர்ந்த சுனில் என்பவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–
நமக்கு பிடித்தமான உணவை சில நேரங்களில் நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம். அப்போது அஜீரண கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
நமது வயிறு எப்படி அதனை ஏற்றுக் கொள்வதில்லையோ, அதே போலத்தான் செல்போனும் அளவுக்கு அதிகமாக ஏற்றப்படும் பேட்டரி சார்ஜரை ஏற்றுக் கொள்வதில்லை.
செல்போனை நாம் சார்ஜர் போட்டு 2 அல்லது 3 மணி நேரத்துக்குள்ளாகவே ‘பேட்டரி புல்’ என்று காண்பிக்கும். அல்லது செல்போனில் பச்சைக் கலர் லைட் எரியும்.
உடனே சார்ஜரில் இருந்து செல்போனை எடுத்து விட வேண்டும். இல்லையென்றால் பேட்டரி அதிக சூடாகி வெடித்து ஆபத்தில் முடிந்து விடும்.
அதே நேரத்தில், செல்போனை தலைக்கு அருகில் வைத்தும் தூங்கக்கூடாது. அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு உடல் நலனை பாதிக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் செல்போனை சார்ஜர் போட்டுவிட்டு தூங்கச் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.