தமிழக விவசாயிகளின் போராட்டம் வெற்றி. மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்தது மத்திய அரசு.

metheneதமிழக விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு காரணமாக மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் தஞ்சை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தனியார் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதனால் தமிழக விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

இத்திட்டம் தொடர்பாக கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (ஜிஇஇசிஎல்) நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்ததால் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “”தமிழகத்தில் தஞ்சை, மன்னார்குடி பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக ஜிஇஇசிஎல் நிறுவனத்துக்கு 667 சதுர கி.மீ. பரப்பளவில் அனுமதி அளிக்கப்பட்டது.

இத்திட்டத்தைக் கைவிடக் கோரி தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகியவற்றைச் சேர்ந்த அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் அனுப்பப்பட்ட மனுக்கள் பிரதமருக்கும், தமிழக ஆளுநரின் செயலாளர் மூலம் எங்கள் அமைச்சகத்துக்கும் கிடைக்கப் பெற்றன.

இதற்கிடையே, இத்திட்டத்துக்கான ஆவணங்களை ஜிஇஇசிஎல் நிறுவனம் மத்திய அரசிடம் இதுவரை அளிக்கவில்லை. மேலும், இதற்கான காலக்கெடு 2013, நவம்பர் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.

ஒப்பந்தக்காரர் இப்பகுதியில் மீத்தேன் எடுக்கும் நடவடிக்கைகளை தொடங்காததால், ஒப்பந்த ஷரத்துகளின்படி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வருகிறது’ என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply