தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க இந்திய எல்லையில் தடுப்புச்சுவர். மத்திய அரசு முடிவு

borderபாகிஸ்தான் நாட்டு ராணுவ வீரர்களும், தீவிரவாதிகளும் இந்திய எல்லையில் ஊடுருவது பல ஆண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஊடுருவலை தடுப்பதற்காக, இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட மத்திய அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது.

இந்திய-பாகிஸ்தான் இடையே ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி பாகிஸ்தான் ராணுவம், அடிக்கடி இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தி தொந்தரவு கொடுத்து வருகிறது. மேலும், அந்நாட்டு தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவமே ஆயுதங்கள் கொடுத்து இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த உதவி செய்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கம்பிச் சுருள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தீவிரவாதிகளின் ஊடுருவல் தொடர்ந்து  நடந்து கொண்டு இருக்கிறது.

எனவே கடந்த மே மாதம் பதவியேற்ற மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு, இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு அதிரடியாக முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியபோது ”இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஏற்கனவே கம்பிச் சுருள் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தும், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே, கூடுதலாக தடுப்புச் சுவர் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக எல்லையில் உள்ள 106 கிராமங்களில் 1600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம், கதுவா மற்றும் ஜம்மு மாவட்டங்களில் 110 கி.மீ. தூரத்திற்கு தடுப்புச் சுவர் கட்டப்பட உள்ளது. இந்த தடுப்புச் சுவர் 10 மீட்டர் உயரத்திற்கு கட்டப்படும். இதன் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் தடுக்கப்படுவதோடு, பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறலையும் முடிவுக்கு கொண்டு வர முடியும்” என்று கூறினார்.

இதற்கிடையே, தடுப்புச் சுவர் கட்டினாலும், எல்லையில் அமைதி ஏற்படும் என கருதவில்லை எனவும், கிராமங்களை ஒட்டிய இடத்தில் தடுப்புச் சுவர் அமைப்பதால், பாகிஸ்தான் வீசும் ராக்கெட் குண்டுகள் நேரடியாக வீடுகளின் மேல் விழும் எனவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply