10 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு. தட்டுப்பாடு நீங்குமா?
கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் கடும் தட்டுப்பாடு காரணமாக அதன் விலை கிடுகிடுவென விஷம் போல் ஏறிவருகிறது. இந்த நிலையை கட்டுப்படுத்த, வெளிநாடுகளிலிருந்து 10 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் வெங்காயத் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. சென்னையில் ஒருகிலோ பெரிய வெங்காயம் ரூ.100க்கும் அதற்கு அதிகமாகவும் விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் இதைவிட கூடுதலாகவும் விற்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களிலும் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ.80 க்கு குறையாமல் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 100 ரூபாயைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. இதனால் வெங்காயத்தின் வரலாறு காணாத விலை உயர்வைக் கண்டித்து வடமாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வெங்காயத்தின் தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து 10 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய சர்வதேச அளவில் மத்திய அரசு டெண்டர் கோரி உள்ளது. இந்த டெண்டர்கள் வருகிற 27ஆம் தேதி திறக்கப்பட்டு, தகுதியுள்ள டெண்டர் இறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் வெங்காய ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.
வெங்காய தட்டுப்பாட்டை சமாளிப்பது தொடர்பாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரசத் சிங் பாதவ் கூறுகையில், ‘உபரி விளைச்சலின் போது வெங்காயத்தை பதப்படுத்தி பொடியாக்கி வைத்துக்கொள்ளலாம். இதனால் வெங்காயம் வீணாவது தடுக்கப்படுவதுடன் விலை ஏற்றமும் கட்டுப்படுத்தப்படும்’ என்றார். இதற்கு சமூக வலைத் தளங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.