கடந்த மே மாதம் 1ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பலியான சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் நேற்று சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒரு நபர், ‘தனது பெயர் முனுசாமி என்றும், தான் வேளச்சேரி பகுதியில் இருந்து பேசுவதாகவும், தனது வீடு அருகே இரண்டு மர்ம நபர்கள் மாலை 6 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயிலி்ல் குண்டுவைக்க இருப்பதாக பேசியதாகவும் கூறினார்.
இதனால், அதிர்ச்சியைடந்த ரயில்வே காவல்துறையினர் ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து ரயில்களிலும் சோதனையை மேற்கொண்டனர். பயணிகளின் பொருட்கள் சோதனைக்கு பின்னரே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.
மாலை 6 மணிக்கு குண்டுவெடிக்கும் என்ற தகவலால் சென்ட்ரல் ரயில் நிலையம் காவல்துறையினரின் முழு கட்டுப்பாட்டுக்கு வந்தது. மேலும், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தவர் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மாலை ஆறுமணிக்கு மேல் ஆகியும் எந்தவித குண்டுவெடிப்பும் நிகழாததால் காவல்துறையினர் நிம்மதி அடைந்தனர். இருப்பினும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக உள்ளது.