பிரதமரின் ஸ்மார்ட் சிட்டி திட்டம். 98 நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியீடு
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டமான 100 ஸ்மார்ட் சிட்டிகள் திட்டத்தில் 98 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், அவற்றில் 12 நகரங்கள் தமிழகத்தை சேர்ந்தவை என்றும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஸ்மார்ட் சிட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். அதில் உத்தரப்பிரதேசத்திலிருந்து அதிகபட்சமாக 13 நகரங்களும், தமிழகத்திற்கு 12 நகரங்களும், மகாராஷ்டிரத்துக்கு 10 நகரங்களும், மத்திய பிரதேசத்துக்கு 7 நகரங்களும், , கர்நாடகா, குஜராத் மாநிலங்களுக்கு தலா 6 நகரங்களும், , பிஹார் மற்றும் ஆந்திராவுக்கு தலா 3 நகரங்களும், , ஹரியாணா, சத்தீஸ்கருக்கு தலா 2 நகரங்களும், , இதர மாநிலங்களுக்கு தலா ஒரு நகரத்துக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அனைத்து யூனியன் பிரதேசங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தை சேர்ந்த சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர், வேலூர், சேலம், திண்டுக்கல், தஞ்சை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய 12 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை அறிவித்தபோது, 100 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதாகவும் தற்போது 98 நகரங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 2 நகரங்களின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.