கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருமுன் தடுக்கலாம் !

p26b

உலக அளவில் இருக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளிகளில், 25 சதவிகிதத்தினர் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். ‘செர்விகல் கார்சினோமா’ (Cervical carcinoma) எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உண்டாவதற்கு, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (Human Papilloma Virus) காரணம்.

இது ஆணிடம் இருந்து பெண்ணுக்குத் தாம்பத்ய உறவின் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் மனித உடலில் இருந்தாலும், எல்லோருக்கும் இது பிரச்னையை உண்டாக்குவது இல்லை. உடலிலேயே தங்கும்போது அல்லது எதிர்ப்புச் சக்தி குறையும்போதுதான், இந்த வைரஸ் வீரியத்துடன் தாக்கும். இந்தப் புற்றுநோய் திடீரென்று ஒருநாளில் தோன்றுவது இல்லை. வைரஸ் கிருமிகள் உடலில் நுழைந்து திசுக்களில் மாறுதல்களை ஏற்படுத்தி, பல வருடங்கள் கழித்தே புற்றுநோயாக வெளிபடும். அதற்குள், அதைக் கண்டுபிடித்து, தொடர்ந்து சிகிச்சை எடுத்தால், முற்றிலுமாகக் குணப்படுத்திவிடலாம்.

p26c

பெண்களுக்குக் கர்ப்பப்பையில் வேறு ஏதேனும் தொற்று, கர்ப்பப்பை வாயில் புண் இருந்தாலும் இந்த வைரஸ் சுலபமாகத் தாக்கி, உள்நுழைந்துவிடும். ஏற்கெனவே ஏதேனும் நோய்த்தொற்று இருந்து, அதைச் சரிசெய்யாமல் விட்டாலும், வைரஸுக்கு சாதகமாக அமைந்துவிடும். கர்ப்பப்பை வாயினுள் நுழையும் வைரஸ், உடலின் திசுக்களில் மாறுதல்களை உண்டாக்கும். இவைதான், புற்றுநோய் வருவதற்கு முன்னால் வரும் மாறுதல்கள். இந்த மாறுதல்கள் ஏற்பட்டு சுமார் 20 ஆண்டுகள் கழித்துத்தான், அது புற்றுநோயாக மாறுகிறது. இந்த நீண்ட காலக்கட்டத்தில், தொடர்ந்து பரிசோதனை செய்துகொண்டே இருந்தால், நோய் வருவதை முன்கூட்டியே கண்டுபிடித்துவிடலாம். 

சினைப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய்கள் குறிப்பிட்ட சில நிலைகளை அடைந்த பிறகுதான், கண்டுபிடிக்க முடியும். ஆனால், கர்ப்பப்பை வாய் புற்றுநோயை, ஆரம்பிக்கும் முன்பே கண்டுபிடித்து, வராமல் தடுக்க முடியும்.

பரிசோதனை: பாப்ஸ்மியர் (Papsmear), வயா, வில்லி (VIA,VILI) பரிசோதனைகள் மூலம், திசுக்களில் ஏற்படும் மாறுதல்களைக் கண்டறிய முடியும். மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும்பட்சத்தில் CRYO என்ற எளிதான முறையில், சரிசெய்துவிடலாம். அல்லது அந்த இடத்தை அறுவைசிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். சிகிச்சைக்குப் பிறகும்கூட, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
தடுப்பூசி: இந்த வைரஸ் கிருமி உடலுக்குள் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தடுப்பதற்கு, தடுப்பூசி உள்ளது. பெண்குழந்தைகள் அனைவருக்கும், 10 முதல் 11 வயதுக்குள் இந்த ஊசியைப் போடவேண்டும்.

ஆறு மாதங்களுக்குள் மூன்று முறை போடவேண்டும். இந்த வயதில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தவறியவர்கள், 45 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். இது முதல்நிலைத் தடுப்பாகச் செயல்படும். தடுப்பூசி போடப்படும் குழந்தைகளுக்கு, திருமண வயது வரும்போது, பாப்பிலோமா வைரஸை எதிர்க்கும் அளவுக்கு எதிர்ப்புச் சக்தி உருவாகிவிடும்.

விருது தந்த விழிப்புஉணர்வு!

டாக்டர் ராதாபாய் பிரபு, 1985-ம் ஆண்டு வடசென்னை, ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் பணிபுரிந்தபோது, மும்பையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த பயிற்சி பெற்றவர்.  நோய் வருவதற்கு முந்தைய நிலையிலேயே அதைக் கண்டுபிடிப்பதற்கான கால்போஸ்கோப்பி (Colposcopy) என்ற பயிற்சியைப் பெற்று, பிறகு, இங்கிலாந்தில் நான்கு ஆண்டுகள் அட்வான்ஸ்டு ட்ரெய்னிங்கை முடித்தவர். இந்தப் புற்றுநோய் குறித்த விழிப்புஉணர்வுப் பி்ரச்சாரத்தைத் தீவிரமாகத் தொடர்ந்து செய்துவருபவர். மருத்துவரை விட்டு, இந்த விழிப்புணர்வை, ஏற்படுத்தும் வண்ணம், பாப்ஸ்மியரின் முக்கியத்துவம் மற்றும் கால்போஸ்கோப்பி எவ்வாறு செய்யவேண்டும் என்று அவர்களுக்கான வொர்க்‌ஷாப் நடத்துதல், பொதுமக்களுக்கு `ஸ்கிரீனிங் கேம்ப்’ நடத்துதல், புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், தகுந்த மருத்துவம் செய்தல் போன்றவற்றை சத்தமில்லாமல் செயல்படுத்தியவர்.  கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மகளிருக்கான மலட்டுத்தன்மை நீக்கம் குறித்த புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் பல எழுதியிருக்கிறார்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் ஃபெலோப்பியன் குழாய் குறைபாட்டால் ஏற்படும் மலட்டுத்தன்மை குறித்த ஆய்வுகள், விழிப்பு உணர்வுப் பிரசாரங்களுக்காக, தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதை அண்மையில் பெற்றுள்ளார்.

பரிசோதனை அவசியம்!

பெண்கள், கர்ப்பப்பையில் தொற்றுகள், தொடர்ந்து வெள்ளைப்படுதல் இருந்தால் அதை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரிடம் போய் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மரபு வழியில் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அறிகுறிகள் இருந்தால்தான் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது இல்லை. மணமான பெண்கள் அனைவரும் 3 வருடங்களுக்கு ஒருமுறை கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.  அவ்வாறு முடியாவிட்டால், 35 வயது முதல் 45 வயதுக்குள் ஒரு முறையேனும் பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 

 35 – 45 வயதுக்குள் பரிசோதனை செய்யும்போது, கூடவே, வைரஸைக் கண்டறியக்கூடிய HPV பரிசோதனையையும் செய்துகொள்வது நல்லது. ஏனெனில், பாப்ஸ்மியர் பரிசோதனையில், வைரஸால் உண்டாகும் மாறுதல்களை மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். 35 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், HPV  பரிசோதனை செய்யத் தேவை இல்லை மெனோபாஸுக்குப் பிறகும்கூட, பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

Leave a Reply