திருப்பதி ஏழுமலையான் பணத்தை கடன் கேட்ட ஆந்திர முதல்வர்.

 TTDதிருப்பதி ஏழுமலையானின் திருமணத்திற்காக குபேரன் கடன் கொடுத்ததாக வரலாறு உண்டு. குபேரனிடம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே திருப்பதி உண்டியலில் சேரும் பணம் செல்வதாக ஒரு ஐதீகமும் உண்டு. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் குடிநீர் திட்டத்துக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திடம் ரூ. 25 கோடி கடன் வழங்குமாறு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய திருமலை சென்றார். அங்கு அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்து, தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர். தரிசனத்திற்கு பின்னர் முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திருப்பதியில் சிலர் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க அரசு பரிசீலிக்கும்.

திருப்பதி குடிநீர் திட்டத்துக்காக அரசுக்கு, ரூ. 25 கோடி கடன் வழங்கும்படி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருப்பதியில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். பின்னர் அவர் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து விஜயவாடா சென்றார்.

Leave a Reply