கடைசி பைசா வரும் வரை ஓயமாட்டேன். சுதந்திர தின விழாவில் சந்திரபாபு நாயுடு ஆவேச பேச்சு
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு பிரதமர் மோடியுடன் இணக்கமான உறவை வைத்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திடீரென மத்திய அரசை நேற்றைய சுதந்திர தின விழாவில் விமர்சித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் அனந்தபுரத்தில் நேற்று சுதந்திர தின உரையில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ‘மாநிலத்தை 2-ஆகப் பிரித்ததால், ஆந்திரத்துக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. போலாவரம் திட்டத்துக்கு நிதியுதவி அளிக்கவோ அல்லது அதுதொடர்பாக ஆந்திரத்துக்கும், தெலங்கானாவுக்கும் இடையே நிலவும் பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சி செய்யவோ இல்லை.
ஆந்திரத்துக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும். விசாகப்பட்டினத்தில் புதிய ரயில்வே முனையத்தை ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் பலமுறை கோரிக்கை விடுத்து விட்டேன். மத்திய அரசிடம் இருந்து ஆந்திரத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிதியில் கடைசி பைசா வரும் வரையிலும் நான் ஓய்வெடுக்க மாட்டேன். இதற்காக ஆந்திர மக்கள் எனக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’
சந்திரபாபு நாயுடுவின் இந்த ஆவேச பேச்சு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.