தென் மாநிலங்கள் தான் நாட்டிலேயே அதிக வரியை மத்திய அரசு கொடுக்கின்றன. ஆனால் அந்த வரியை வடமாநிலங்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்வதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆந்திர சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரித்த போது மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
மத்திய அரசுக்கு அதிகம் வரி செலுத்துவது தென் மாநிலங்கள் தான். ஆனால் அந்த வரிப்பணம் முழுவதும் வடமாநிலங்களின் வளர்ச்சிக்கே மத்திய அரசு ஒதுக்குகிறது. மேலும் ஆந்திர மாநிலத்தில் இருந்து பெறப்படும் வரியை ஆந்திராவுக்கே ஒதுக்காதது ஏன்?
அனைத்து வரியுமே மக்கள் செலுத்துவது தான், எனவே அதை மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி என்று பார்க்கக் கூடாது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரமுடியாது என்பதை ஏற்க இயலாது. ஆந்திராவும் இந்தியாவின் ஒரு பகுதி தானே. தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரித்த போது கொடுத்த வாக்குறுதியான ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு, தராதது ஏன்? இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆவேசமாக பேசினார்.