சந்திராஷ்டமம் என்றால் என்ன, இதனைக் கணக்கிடுவது எப்படி, இந்த சந்திராஷ்டமம் என்ன செய்யும், இந்நாட்களில் சுபநிகழ்ச்சிகளை செய்யக்கூடாது என்கிறார்களே… என்று பலரும் பலவிதமான சந்தேகங்களைக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் பத்திரிகைகளில் ராசிபலனைப் படிக்கும்போதும், காலண்டர்களிலும் சந்திராஷ்டமம் என்ற வார்த்தையைப் பார்த்திருப்போம். அஷ்டமம் என்றால் எட்டு என்று அர்த்தம். சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் எட்டாவது ராசியில் சஞ்சரிக்கிறார் என்பது பொருள். பொதுவாக ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கின்ற கால அளவானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த அளவின்படி சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் 2 1/4 நாட்கள் அதாவது, தோராயமாக 54 மணிநேரம் வாசம் செய்வார். இப்படி ஒவ்வொருவரின் ராசிக்கும் எட்டாவது ராசியில் சந்திரன் அமையும் காலத்தை சந்திராஷ்டம காலம் என்கிறார்கள்.
உதாரணத்திற்கு மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு விருச்சிக ராசியில் சந்திரன் இருக்கும் காலம் சந்திராஷ்டமமாக இருக்கும். மொத்தம் 27 நட்சத்திரங்கள் என்பதால் கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு ஒருமுறை இதனை ஒவ்வொருவரும் சந்திக்க வேண்டி இருக்கும். சரி, இந்த சந்திராஷ்டமத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? சந்திரனை மனோகாரகன் என நிர்ணயம் செய்திருக்கிறார்கள். நமது மன நிலையை நிர்வகிப்பதே சந்திரனின் பணி. எட்டாம் இடம் அசுபமான பலன்களை உண்டாக்கக் கூடியது என்பதால் எட்டாம் இடத்திற்கு சந்திரன் வருகின்ற அந்தக் குறிப்பிட்ட 2 ¼ நாட்கள் டென்ஷனாக இருக்கும், அவ்வளவுதான். இதற்காக இவ்வளவு பில்ட் அப்- தேவையா?
மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்களுக்கும், எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களுக்கும் பிரச்னை இல்லை. மற்றவர்களுக்குத் தொல்லைதான். மனதில் குழப்பத்தினைத் தோற்றுவிக்கும்படியான நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நடக்கும் என்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்பதற்காக மாத ராசிபலன்களிலும், காலண்டர்களிலும் சந்திராஷ்டம நாட்களை தனிப்பட்ட முறையில் குறிப்பிடுகிறார்கள். ‘பதறாத காரியம் சிதறாது’ என்று சொல்வார்கள். சந்திராஷ்டம நேரத்தில் ஒருவித பதட்டத்தோடு செயல்படுவோம், அதனால் ஈடுபடும் காரியங்களில் எளிதாக வெற்றி கிடைக்காது; அற்ப காரணங்களினால் இழுபறி உண்டாகும், இதனால் டென்ஷன் மேலும் அதிகரிக்கும், உடனிருப்பவர்களிடம் எரிந்து விழுவோம் அல்லது அவர்களின் எரிச்சலுக்கும் வசவுகளுக்கும் ஆளாவோம் – இவை சந்திராஷ்டம நாட்களில் ஏற்படக்கூடிய பொதுவான பலன்கள்.
மனித உடற்கூறு இயலைப் பொறுத்தவரை சந்திரன் நம் உடலில் ஓடுகின்ற ரத்தத்தைக் குறிக்கிறார். சந்திராஷ்டம நாட்களில் உண்டாகும் பதட்டத்தின் காரணமாக ரத்தம் சூடேறும். டென்ஷன் அதிகமாகும். ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் சந்திராஷ்டம நாட்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால்தான் திருமணம், க்ருஹப்ரவேசம் போன்ற சுபவிசேஷங்களில் சந்திராஷ்டம நாட்களை விலக்குகிறார்கள். வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் மணமக்களுக்கு ஏற்கெனவே ஆனந்த டென்ஷன் இருக்கும். இதில் சந்திராஷ்டமத்தின் காரணமாகத் தோன்றும் பதற்றமும் இணைந்தால் என்னாவது?
மணமக்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் பெற்றோருக்கும் சந்திராஷ்டமம் இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்து திருமண நாளைக் குறிப்பதும் உண்டு. அதுபோல அதிமுக்கியமான அறுவை சிகிச்சை செய்யவிருக்கும் மருத்துவர்களும், செய்யப்பட உள்ள நோயாளிகளும் தங்கள் சந்திராஷ்டம நாட்களைத் தவிர்த்து விடுவார்கள். மருத்துவர் அன்றைய தினத்தில் தனக்கு உண்டாகும் பதட்டத்தின் காரணமாக ஏதேனும் தவறு செய்து விடலாம்; நோயாளிக்கு ரத்த அழுத்தத்தில் தோன்றும் மாறுபாடு காரணமாக அறுவை சிகிச்சை தோல்வியில் முடியலாம் என்பதே இந்நாட்களை தவிர்ப்பதற்கான காரணம்.
சந்திராஷ்டம நாட்கள் டென்ஷனை உண்டாக்கும் என்பது சரி, அதற்காக அந்த நாட்களில் பணி ஏதும் செய்யாமல், வெளியில் போகாமல் முடங்கிக் கிடக்க முடியுமா? விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மனிதருக்கும், உடனடியாக சிகிச்சை செய்தே தீரவேண்டிய மருத்துவருக்கும் சந்திராஷ்டம நாள் என்று சும்மா இருந்துவிட முடியுமா? இதற்கு பரிகாரம் ஏதும் கிடையாதா? நிச்சயமாக உண்டு. சந்திரனுக்குரிய திரவமான பாலைக் குடித்துவிட்டு வேலையைத் துவக்கலாம். குளிர்ச்சியான பாதாம்பால் போன்றவையும் பதட்டத்தினைக் குறைக்கும். (முதலிரவில் மணமக்கள் பால் அருந்த வேண்டும் என்ற பழக்கத்தை நம்மவர்கள் வைத்திருப்பதும் இதற்காகத்தான்).
சந்திராஷ்டம நாட்களை ஜோதிடர்கள் முன்னமேயே குறித்துக்கொடுப்பது கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே அன்றி, பணி செய்யாமல் சும்மா இருப்பதற்காக அல்ல. சந்திராஷ்டம நாட்கள் கெடுதல் பலன்களை மட்டும்தான் உண்டாக்கும் என்பது முற்றிலும் தவறு. ஒவ்வொரு ராசியினருக்கும் ஒருசில நன்மைகளையும் சந்திராஷ்டம நாட்களில் எதிர்பார்க்கலாம். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசியினருக்கும் சந்திராஷ்டமம் எந்தெந்தவிதமான நற்பலன்களைத் தரும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம் – சந்திரன் எட்டில் நீசம் பெற்ற நிலையில் இருந்தாலும், மறைமுக எதிரிகள் வலுவிழந்து போவார்கள். கடன்காரர்களின் தொல்லை இருக்காது. கூட்டாக செய்து வரும் தொழில்களில் லாபம் காணலாம். லாபம்தரும் தொலைதூர பிரயாணங்கள் செய்ய நேரிடும்.
ரிஷபம் – பிள்ளைகளின் வாழ்வில் முன்னேற்ற வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கைத்துணையின் பெயரில் சொத்துகள் சேரும். தொழில் முறையில் கடுமையான அலைச்சல் இருந்தாலும், அதற்கான லாபம் நிச்சயமாகக் கிடைக்கும்.
மிதுனம் – பொதுவாக அதிக சிரமத்தினை சந்தித்தாலும் அடுத்தவர்களுக்கு உதவி செய்து புகழ் பெறுவர். கடும் பொருளிழப்பினை சந்தித்தாலும், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தானம் செய்ய நேரிடும் என்பதால் மற்றவர்களிடையே மிகுந்த நற்பெயர் கிடைக்கும். கௌரவம் உயரும். பிள்ளைகளின் உத்யோகத்திற்கு அன்றைய தினம் செய்யும் உதவி நல்ல வெற்றியைத் தரும்.
கடகம் – வாழ்க்கைத் துணையின் பெயரில் சொத்துகள் சேரும். சொந்த பணிகளை விட வாழ்க்கைத் துணையின் செயல்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியிருக்கும். எதிரிகள் வலுவிழப்பார்கள். கடன்சுமை குறையும். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும். தொழில் ரீதியாக அலைச்சல் அதிகமானாலும் நல்ல லாபத்தினைக் காண்பர்.
சிம்மம் – சந்திராஷ்டமத்தால் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர மற்றபடி அதிக நன்மையைக் காண்பர். 12ம் இடத்திற் குடையவனான சந்திரன் எட்டாம் இடத்தில் அமர்வதால் அநாவசிய விரயங்களும், பொருளிழப்பும் தவிர்க்கப்படும். மறைமுக எதிரிகள் மறைந்து போவார்கள். வீண் அலைச்சல் குறையும். ஆன்மிகப் பயணங்களுக்கான வாய்ப்புகள் உருவாகும். மூத்த சகோதரருக்கு செய்யும் உதவி குறிப்பிடத்தகுந்த நன்மையை உண்டாக்கும்.
கன்னி – லாபத்தில் நஷ்டத்தினை சந்திக்க நேர்ந்தாலும் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை கொள்ளத்தக்க சம்பவங்கள் நிகழும். போட்டியாளர்களின் தொல்லைகள் குறையும். வாழ்க்கைத் துணையின் உடன்பிறந்தோருக்கு உதவி செய்து நற்பெயர் அடைவர்.
துலாம் – துலாம் ராசியைப் பொறுத்தவரை சந்திராஷ்டம நாட்களில் சந்திரன் உச்சம் பெற்று இருப்பார். அன்றைய தினம் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர மற்ற வகையில் மிகுந்த நன்மை காண்பர். தொழில் முறையில் சிறிது சிரமத்தினை சந்திக்க நேர்ந்தாலும் செய்யும் தொழிலில் நல்ல தனலாபம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் பெயரில் இருக்கும் சேமிப்புகள் உயரும். வாகனங்கள் மற்றும் பிரயாணங்களில் ஆதாயம் உண்டாகும்.
விருச்சிகம் – வீண்பழிகளை சுமக்க நேரிடுவதால் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர்த்து நோக்கினால் போட்டியாளர்கள் வகுக்கும் திட்டங்களைப் புரிந்துகொள்வர். அன்றைய தினத்தில் செயல்பட முடியாது போனாலும் வெற்றிக்காண வழிகளை அறிந்து கொள்ள முடியும். பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் உயரும். கடன் சுமைகள் குறையும்.
தனுசு – செலவுகள் அதிகரிப்பதால் மன உளைச்சல் உண்டாகுமே தவிர வேறு பாதிப்புகள் ஏதும் நேராது. கூட்டுத்தொழிலில் நல்ல தன லாபம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் பெயரில் சொத்துகள் சேரும். தொழில் முறையில் சிறப்பான தனலாபத்தினைக் காண்பர். நலிந்தவர்களுக்கு உதவி செய்து நற்பெயரை அடைவர்.
மகரம் – வாழ்க்கைத் துணையின் பெயரில் இருக்கும் சேமிப்புகள் உயரும். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கூட்டுத்தொழில் நன்மை தரும். எதிரிகளால் உண்டாகும் போட்டினைச் சமாளித்து வெற்றி காணும் திறன் உண்டாகும். ஆன்மிக சிந்தனைகள் மனதை அதிகம்
ஆக்கிரமிக்கும்.
கும்பம் – சந்திராஷ்டமத்தினால் அதிக நன்மை அடைபவர்கள் இவர்களே. ஆறாம் இடத்திற்குரியவர் எட்டில் அமர்வதால் ஆறாம் இடம் வலுவிழந்து போகும். எதிரிகள் வலுவிழப்பார்கள். வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமான முடிவினைத் தரும். கடன்சுமை குறையும். நோய்களின் தாக்கம் குறையும். தொழில் முறையில் அதிக அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் குறிப்பிடத் தகுந்த தனலாபம் உண்டாகும்.
மீனம் – பிள்ளைகளின் பெயரில் இருக்கும் சேமிப்புகள் உயரும். கூட்டு முயற்சிகள் வெற்றியைத் தரும். குடியிருக்கும் வீட்டில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வர். கடன்சுமை குறையும். வாழ்க்கைத் துணையின் பணியில் இவர்கள் செய்யும் உதவிகள் நல்ல தனலாபத்தினைப் பெற்றுத் தரும். தொழில்முறையில் இருந்து வந்த சந்தேகங்கள் விலகும்.
இப்படி சந்திராஷ்டம நாட்களில் 12 ராசிக்காரர்கள் பல நன்மைகளும் நடப்பதை அனுபவ பூர்வமாகக் காண இயலும். மன உளைச்சலைத் தரும் நாட்கள் அவை என்பதை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள். அதற்கு ஏற்றவாறு உங்கள் செயல்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். சந்திராஷ்டமம் குறித்து எந்தவிதத்திலும் பயம் கொள்ளத் தேவையில்லை.