தமிழக சிறைக்கு ஜெயலலிதாவை மாற்ற கர்நாடக ஐகோர்ட்டில் மனு. இன்று விசாரணை

jayalalitha bailபெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக்கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, ”ஜெயலலிதாவை  பெங்களூர் சிறையில் வைத்திருப்பதால், இம்மாநில போலீசாருக்குதான் கூடுதல் வேலைப் பளு ஏற்படுகிறது. இரு மாநில உறவில் நல்லிணக்கம் கெடும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜெயலலிதாவை சென்னை சிறைக்கு மாற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டு” என முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், கர்நாடக அமைச்சர் ஒருவரும் தெரிவித்திருந்திருந்தனர்.

இந்நிலையில், ”உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிதான் ஜெயலலிதாவின் வழக்கு கர்நாடக நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. எனவே, உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஜெயலலிதாவை வேறு மாநிலத்திற்கும் மாற்றும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை” என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார்.

இந்நிலையில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்திய நாராயணன் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ”பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடைக்கப்பட்டிருப்பதால், தமிகத்தில் இருந்து பல பேர் பெங்களூரு வந்து செல்கின்றனர். இதனால், பெங்களூரு போலீசாருக்கு பளூ அதிகரித்துள்ளது. மேலும், இரு மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவை கெடுக்கும் வகையிலான சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற உத்தரவிடவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இந்த மனு கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா தலைமையில் இன்று (10ஆம் தேதி) விசாரணைக்கு வர உள்ளது.

Leave a Reply