மழையை நிறுத்த ஹனுமன் மந்திரங்களை கூறுங்கள்: பொதுமக்களுக்கு பாஜக பிரமுகர் அறிவுரை
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபகாலமாகவே கடுமையாக மழை பெய்து வருவதால் அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் மூழ்குவதோடு, வெள்ளத்தால் பொதுமக்களுக்கும் சேதம் விளைவித்து வருகிறது. மகாராஷ்டிரா மட்டுமின்றி மேற்கு வங்காளம், சிக்கிம், ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், வடக்கு ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கிழக்கு மத்திய பிரதேசம், விதர்பா மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் புயல் பாதிப்பு உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து தப்பிக்க அனைவரும் ஹனுமன் மந்திரங்களை சொல்ல வேண்டும் என்று மத்திய பிரதேச பாஜக தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரமேஷ் சக்ஸேனா பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு கிராமத்திலும் தினமும் ஒரு மணி நேரம் ஹனுமன் மந்திரத்தை உச்சரித்தால் இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். அதேபோல், இளைஞர்களும் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஹனுமன் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.