சென்னை உள்பட அனைத்து மாநகராட்சிகளிலும் அம்மா உணவகம் பொதுமக்களின் ஒத்துழைப்போடு மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. காலையில் இட்லியும், மதியம் சாமபார், கருவேப்பிலை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம் போன்ற வகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் வரும் 21ஆம் தேதி முதல் சப்பாத்தி வழங்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சப்பாத்தி தயாரிப்பதற்காகவே 15 நவீன சப்பாத்தி எந்திரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி 4 லட்சம் சப்பாத்திகள் தயாரிக்கப்பட்டு 200 அம்மா உணவகங்களுக்கும் தலா 2000 சப்பாத்திகள் அனுப்பப்படும் என்றும் அந்த உணவகங்களில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை சப்பாத்தி விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒரு சப்பாத்தியின் விலை ரூ.3 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் தினமும் 2 லட்சம் பேர் அம்மா உணவகத்தை பயன்படுத்துகின்றனர். சப்பாத்தி விற்பனை தொடங்கிவிட்டால் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தெரிகிறது.