தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மொத்தம் 41 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் இன்று முதல் 10 முதல், 15 சதவீத கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளோடு தனியார் வசமும் சில சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வாகன நுழைவுக்கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. வாகன ஓட்டிகளுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் சுங்கச் சாவடிகளில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில் இந்த கட்டண மாற்றம் வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
லாரி உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உள்பட அனைத்து தரப்பினர்களும் இந்த கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுங்கக் கட்டண உயர்வு காரணமாக, ஆம்னி பேருந்துகள் கட்டணம் மற்றும் சரக்கு வாகனங்களின் வாடகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.