செங்கல்பட்டு நரசிம்ம பெருமாளுக்கு ரூ.1 கோடியில் ராஜகோபுரம்!

LRG_20151003115241314050

செங்கல்பட்டு அருகே உள்ள, நரசிம்ம பெருமாள் கோவிலில், தொல்லியல் துறை வல்லுனர்களின் அறிவுரைப்படி, 1 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் திருப்பணிகள் துவங்கி உள்ளன.

அரிய கோலம்: செங்கல்பட்டு அடுத்த, சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள, பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், பல்லவர் கால குடைவரை கோவிலாகும். இது, இந்து சமய அறநிலையத் துறை யின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் உள்ள மூலவர், வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டபடி, சங்கு, சக்கரத்தை ஏந்திய நிலையில் உள்ளார்.
வலது கையை அபயகரமாகவும், இடது கையை, தொடை மீது வைத்த நிலையிலும், நெற்றிக்கண் கொண்டு, கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது.

ஓராண்டிற்குள்… இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில், ராஜகோபுரம் இல்லாமல் இருந்தது. எனவே, ராஜகோபுரம் கட்டித் தரக்கோரி, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தமிழக முதல்வரிடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், முதலியாண்டான் சுவாமிகளின் தாசரதி டிரஸ்ட் மூலம், 1 கோடி ரூபாயில் ராஜ கோபுரம் கட்டித்தர முன் வந்தனர். இதையடுத்து, தொல்லியல் துறை வல்லுனர் நரசிம்மன் அறிவுரைப்படி, கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் கட்ட, முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 16ம் தேதி, பூமி பூஜையுடன், ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் திருப்பணிகள், திருவாரூர் ஸ்தபதி முத்துக்குமார் தலைமையில், துவங்கி உள்ளன. இப்பணிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையும் என, இந்து சமயஅறநிலையத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோபுரத்தின் அமைப்பு: ராஜகோபுரம், 18 அடி அகலம், 27 அடி நீளம், 62 அடி உயரத்தில், ஐந்து நிலைகள் கொண்டதாக கட்டப்படுகிறது. கோபுரத்தில், அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட உள்ளன.

Leave a Reply