நேற்று முன் தினம் சென்னை சென் ட்ரல் ரயில் நிலையத்தில் வெடித்து வெடிகுண்டு சம்பவத்தில் இளம்பெண் ஸ்வாதி பரிதாபமாக பலியானார். இந்தசம்பவத்தை ஒட்டி நகரின் பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் நடந்த வெடிகுண்டு சம்பவம் காரணமாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் திருமலை முழுவதும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களால் அமைக்கப்பட்ட கமாண்டோக்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருமலையில் உள்ள இலவச தங்கும் விடுது, இலவச உணவு விடுதி, வழிபாட்டுத்தலங்கள் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸார் சந்தேகத்திற்குரிய நபர்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இதுபோலவே திருசனூர், பத்மாவதி தாயார் கோவில், கன்னிப்பாக்கம் விநாயகர் கோவில் ஆகிய இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை விஜயவாடா ரயில் நிலையம் அருகே 10 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை அழிக்கப்பட்டது. மேலும் நெல்லூர் ரயில் நிலையத்தில் அனாதையாக கிடந்த ஒரு சூட்கேஸால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த சூட்கேஸ் பயணி ஒருவர் தவறவிட்டது என கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை குண்டுவெடிப்பு சம்பவத்தை ஒட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பணி உஷார் நிலையில் உள்ளது.