சென்னை போரூர் அருகே முகலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து இதுதொடர்பாக கட்டுமான நிறுவன இயக்குநர்கள் 2 பேர் மற்றும் கட்டட பொறியாளர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ப்ரைம் சிருஸ்டி என்ற தனியார் நிறுவனம், முகலிவாக்கத்தில் நேற்று மாலை இடிந்து விழுந்த கட்டிடத்தை கட்டி வந்தது. இதில் கட்டட தொழிலாளர்கள் உட்பட 50 பேர்களுக்கும் மேல் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் இதுவரை 11 பேர் பலியாகியிருப்பதாக தெரிகிறது. காயமடைந்த பலர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களில் ஒருசிலர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் கட்டுமான நிறுவனத்ஹ்டின் இயக்குநர்களான இருக்கும் முத்து, மனோகரன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களை இன்று காலை கைது செய்தனர்.
மேலும் கட்டட பொறியாளர்கள் சங்கர், துரைசிங்கம் ஆகிய இருவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரிடமும் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.