பேருந்துகளைப் பயணிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில், பேருந்து வழித்தட எண்ணை ஒரே மாதிரியாக மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது.
முதல் கட்டமாக, 20 பேருந்துகளில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இப்போது மேலும் 30 பேருந்துகளில் வழித்தட எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பட்டாபிராம் (எம்153) 153, திருவள்ளூர் (596) 153ஏ, பண்டூர் (596ஏ) 153பி, மெப்பூர் (53கே) 153கே, பெரும்பாக்கம்(591ஏ) 153பி, பெரும்பாக்கம் வழியாக திருவள்ளூர் (596பி) 153டி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் 153 என்ற வழித்தட எண்ணில் ஆரம்பிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுபோல் திருவான்மியூரிலிருந்து தாம்பரம், கூடுவாஞ்சேரி, வண்டலூர் உயிரியல் பூங்கா பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் 91 என்ற வழித்தட எண்ணில் தொடங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிராட்வேயிலிருந்து கேளம்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகிநகர், ஒட்டியம்பாக்கம் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் 102 வழித்தட எண்ணில் ஆரம்பிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மூன்று வார காலத்தில் பிற பேருந்துகளின் வழித்தட எண்களும் மாற்றியமைக்கப்பட்டு விடும் என மாநகரப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.