சென்னை – கடலூர் ஈசிஆர் ரயில் திட்ட தாமதத்திற்கு புதுச்சேரி அரசே காரணம். அமைச்சர் தகவல்

ecr railway

சென்னை – கடலூர் வரையிலான ஈ.சி.ஆர் ரயில்வே திட்டம் தாமதமாவதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பிய தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு, மத்திய ரயில்வே இணை அமைச்சர் விளக்கமளிக்கையில் இந்த திட்டத்தின் தாமதத்திற்கு புதுச்சேரி அரசு அங்கீகாரம் வழங்காததே காரணம் என்று கூறியுள்ளார்.

”சென்னை – கடலூர் வரை செல்லக்கூடிய கிழக்குக் கடற்கரை ரயில்வே திட்டம் தற்போது எந்த நிலையில்  உள்ளது என்றும் அந்த திட்டம் ஏன் தாமதமாகிறது?’’ என்றும் நாடாளுமன்றத்தின் மேல்சபையில் தி.மு.க. எம்.பி கனிமொழி நேற்று கேள்வி எழுப்பினார்.

அவரது கேள்விக்கு பதிலளித்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, ‘‘சென்னை -கடலூர் வரையிலான 179 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஈ.சி.ஆர் ரயில் திட்டத்துக்கு மொத்தம் ரூ.1,200 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை இந்தத் திட்டத்துக்காக ரூ.29 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. 2014-15 நிதியாண்டில் இந்தத் திட்டத்துக்காக ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.. தற்போது இறுதிகட்ட இட ஆய்வுப் பணிகள் மிக துரிதமாக நடந்து வருகின்றன.

எனினும் இந்த ரயில்வே திட்டம் புதுச்சேரி மாநிலம் வழியாகவும் செல்வதால் அந்த மாநிலத்தின் அங்கீகாரம் தேவைப்படுகிறது. ஆனால், இந்த திட்டத்துக்கு புதுச்சேரி மாநில அரசு இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை. இதுவே திட்டத்தின் தாமதத்துக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

மேலும் கடலோரத்தில் ரயில் பாதை அமைக்க வேண்டியதுள்ள்தால் அங்குள்ள மண்ணின் தன்மை குறித்து விரிவான மண் பரிசோதனை அறிக்கை தேவைப்படுகிறது. இத்தகைய காரணங்களால் கிழக்குக் கடற்கரை ரயில் திட்டம் தாமதமாகிறது” என்று பதில் கூறினார்.

Leave a Reply