ஜூன் 8-ல் மீண்டும் சென்னை வருகிறார் டிடிவி தினகரன்
அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து பெற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் இருக்கும் டிடிவி தினகரன், சென்னைக்கு வரும் ஜூன் 8ஆம் தேதி வருகிறார்.
ஏற்கனவே கைது நடவடிக்கைக்கு பின்னர் விசாரணைக்காக டெல்லி போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன் டிடிவி தினகரனை சென்னை அழைத்து வந்தனர். இந்த நிலையில் அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், டி.டி.வி.தினகரனை ஜூன் 8ஆம் தேதி கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் அவர் சென்னை வரவுள்ளார்.
இந்த வழக்கு கடந்த மார்ச் 22ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, டி.டி.வி.தினகரன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். ஆனால் மீண்டும் இந்த வழக்கு, கடந்த 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் மட்டும் ஆஜரானார். ஆனால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தினகரன், சுதாகரன் ஆகியோர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் ஜூன் 8ஆம் தேதி தினகரன், சுதாகரன் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.