இழப்பீடு தரும்வரை கப்பல்களை சிறைபிடிக்க கோரிக்கை. எண்ணூர் துறைமுகத்தில் பரபரப்பு
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஒரு சரக்கு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் டன் கணக்கில் கடலில் கலந்தது. இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சரக்கு கப்பல்கள் மோதிய சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க கப்பல் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் இதற்காக தகுந்த இழப்பீடுகளை மோதிய கப்பல்களின் உரிமையாளர்கள் தரவேண்டும் என்றும் அதுவரை இரண்டு கப்பல்களையும் சிறைபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
இந்நிலையில் எண்ணெய் கசிவு விவகாரத்தை துறை செயலாளர் எண்ணெய் அகற்றும் பணியை நேரடியாக கவனித்து வருவதாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. எண்ணெய் அகற்றும் பணிகளுக்காக சென்னை துறைமுகத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 35 டன்கள் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளதாகவும், அதில் 15 டன் கச்சா எண்ணெய் வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.