கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொண்ட சென்னை மாணவி பரிதாப மரணம்
சென்னையில் பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் கயிறு இழுக்கும் போட்டில் கலந்து கொண்டபோது எதிர்பாராதவிதமாக திடீரென மயக்கம் அடைந்து அதன் பின்னர் மரணம் அடைந்தார். இதனால் அப்பள்ளியின் மாணவிகள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
சென்னையில் அம்பத்தூரில் உள்ள எபினேசர் ஜகநாத் மார்க்கஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் வருடாந்திர விளையாட்டுப் போட்டியின் தகுதிச்சுற்று போட்டி நேற்று நடைபெற்று கொண்டிருந்தது. நேற்று காலை சுமார் 11.30 மணியளவில் நடந்த கயிறு இழுக்கும் போட்டியில் ஆஷா என்ற 17 வயது மாணவியும் பங்கு பெற்றார். இதர மாணவியரிடையே கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொண்டிருந்த அவர் விறுவிறுப்பான போட்டியின் இடையில் திடீரென எதிர்பக்கத்தில் இருந்து கயிறு விடுபட்டு, அவர் நின்றிருந்த பக்கத்தில் தளர்வடைந்து துவண்டதால் ஆஷா எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார்.
உடனடியாக மாணவி ஆஷா மயக்கம் அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்களும், சக மாணவியரும் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ஆஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அசம்பாவித மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். சக மாணவி ஒருவரின் மரணத்தால் அப்பள்ளியில் படித்து வரும் அனைத்து மாணவிகளும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.