ஓபிஎஸ் மகன் கைதா? சென்னை ஐகோர்ட் பிறப்பித்த முக்கிய உத்தரவு
ஆர்.கே நகர் தேர்தல் பிரச்சாரத்தின் போது நடந்த மோதல் ஒன்றில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் மற்றும் சகோதரரை கைது செய்ய சென்னை ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் தற்போது நிறுத்தப்பட்டுள்ளபோதிலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஓ.பி.எஸ் அணி ஆதரவாளர்களுக்கும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது ஓபிஎஸ் மகன் தாக்கியதால் சிலர் காயமடைந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் தினகரன் ஆதரவாளர் ஒருவர் தன்னை கொலை செய்ய முயன்றதாகக் கூறி, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் ஓபிஎஸ் சகோதர் ஓ.ராஜா மீது காவல்துறையில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்சின் தம்பி மற்றும் மகன் ஆகியோர் முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தனர். இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், இருவரையும் கைது செய்வதற்கு தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இந்த வழக்கு குறித்து விளக்கமளிக்க ஆர்.கே நகர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.