ஆடி கார் ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனு தள்ளுபடி. குறைவாக மது அருந்தியதாக வாதம்
கடந்த சனிக்கிழமை பிரபல தொழிலதிபரின் மகள் ஐஸ்வர்யா மது அருந்திவிட்டு தனது ஆடிக்காரை மிக வேகமாக ஓட்டி கூலித்தொழிலாளி ஒருவர் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்து குறித்த வழக்கில், ஐஸ்வர்யா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சம்பவ தினத்தின் தான் குறைந்த அளவே மது அருந்தியதாகவும், தனக்கு இன்னும் திருமணம் ஆகாததால் ஜாமீன் தரவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தை நாடிவிட்டு, நிவாரணத்திற்கு முயற்சி செய்ய வேண்டும், அங்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே, உயர் நீதிமன்றத்தை நாட முடியும் என்றும் கூறி நீதிபதி வைத்தியநாதன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.
முன்னதாக ஐஸ்வர்யா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 1-ம் தேதி என்னுடைய நண்பர்களுடன் இரவு சினிமாவிற்குச் சென்றுவிட்டு ஓ.எம்.ஆர் ரோட்டில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு, எனது காரில் வந்து கொண்டிருந்தேன். அப்போது சாலையைக் கடக்க முயன்ற முனுசாமி என்பவர் என்னுடைய ஆடி காரில் அடிபட்டுவிட்டதாக சொல்கின்றனர். இந்த விபத்தில் முனுசாமி என்பவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்தார்.
அங்கிருந்த போலீஸார் என்னைப் பிடித்து விசாரித்துவிட்டு, 2-ம் தேதி என்னைக் கைது செய்தனர். என் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது; கவனக்குறைவால் விபத்தை உருவாக்கியது உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கியிருக்கிறேன். எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.