அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி. சென்னை ஐகோர்ட் உத்தரவு
இன்னும் ஒருசில மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வியூகம் அமைக்க பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டி வருகின்றன. இந்நிலையில் எந்த தேர்தலுக்கும் முதலில் தயாராகும் அதிமுக, செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் நடத்த திட்டமிட்டு அதற்கான பந்தல் அமைக்கும் வேலைகள் சுறுசுறுப்பாய் நடந்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து சமூக ஆர்வலரான டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 31 ம் தேதி (வியாழன்) திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் நடைபெறவுள்ளது. கல்வி நிறுவன வளாகத்தில் இக்கூட்டம் நடைபெறவிருப்பது சட்டவிரோதமானது. அகில இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கும் எதிரானது. எனவே அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று தனது மனுவில் கோரியிருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் அதன் தலைவர் சிவஇளங்கோ அவர்களும் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த 2 மனுக்களையும் அவசர வழக்காக விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது. மேலும் இந்த கூட்டத்துக்காக அதிமுகவினர் வைத்துள்ள கட்-அவுட் மற்றும் பேனர்களுக்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? அதை வைத்தவர்கள் யார்?, நடைபாதையை மீறி அந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளனவா? என்பன குறித்த விரிவான தகவல்களை வரும் ஜனவரி 5 ம் தேதிக்குள் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Chennai Today News: Chennai High Court dismisses AIADMK executive committee meeting of the petition calling for ban