நவம்பர் 16க்குள் சிவாஜி சிலையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நவம்பர் 16க்குள் சிவாஜி சிலையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
sivaji
சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சிலையை நவம்பர் 16-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே விரைவில் சிவாஜிகணேசன் சிலை அகற்றப்படும் என தெரிகிறது.
 
“சென்னை கடற்கரை சாலை, காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை என மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் காந்தி சிலைக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலை, வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதனை வேறொரு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுமீதான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்து பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இருப்பினும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து, நாகராஜன் மீண்டும் ஒரு அவமதிப்பு வழக்கை தொடுத்தார்.

அதில், ”சென்னை மெரினா கடற்கரை முன்புள்ள, நடிகர் சிவாஜிகணேசனின் திருவுருவச் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிவாஜி சிலையை அகற்றுவது குறித்து என்னுடைய கோரிக்கையை பரிசீலிக்கவேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மீது அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 1-ம் தேதி நடந்த போது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “நடிகர் சிவாஜி கணேசனுக்கு, அடையாறு ஆந்திர மகிளா சபா அருகில் மணிமண்டபம் கட்டப்பட உள்ளது. இந்த மணிமண்டபம் கட்டப்பட்டவுடன், இந்த இடத்துக்கு மெரினா கடற்கரை எதிரே உள்ள நடிகர் சிவாஜிகணேசன் சிலை மாற்றப்படும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, “சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி எப்போது தொடங்கப்படும். அந்த பணி எப்போது முடிவடையும்? ” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, இதுகுறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக அட்வகேட் ஜெனரல் கூறினார். இதையடுத்து, வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதை விசாரித்த நீதிபதிகள், சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை நவம்பர் 16-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், சிவாஜி சிலையை அகற்றி விட்டு, அதன் அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டதோடு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Reply