ஏர்செல் சேவை முடக்கம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஏர்செல் சேவை முடக்கம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஏர்செல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறும்வரை சேவையை தொடர உத்தரவிடக் கோரி அதன் வாடிக்கையாளர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், மத்திய அரசு மற்றும் டிராய் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

செல்போன் டவர் சேவை நிறுவனங்களுக்கு வாடகை பாக்கியை ஏர்செல் நிறுவனம் ஒழுங்காக தராததால் ஏர்செல் சேவை திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தங்கள் நிறுவனத்திற்கு சுமார் 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் உள்ளதாகவும் கடனை திருப்பி அளிப்பது குறித்து தீர்க்கமான முடிவுக்கு வர இயலாத நிலையில் உள்ளதால் ஏர்செல் நிறுவனம், திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி, தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறிக் கொள்ளுமாறு ஏர்செல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதை எதிர்த்து, சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர், நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஆதார், எரிவாயு சிலிண்டருக்கு மானியம் ஆகியவற்றுக்கு ஏர்செல் எண் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏர்செல் நிறுவனத்தின் திடீர் முடிவால், தமிழகத்தில் 25 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வேறு நிறுவனங்களுக்கு மாறும்வரை தொடர்ந்து ஏர்செல் சேவையை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு, மத்திய அரசு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மற்றும் ஏர்செல் நிறுவனம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.

Leave a Reply