புதிய தலைமைச் செயலக கட்டிட வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியை விசாரிக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் விசாரிக்க சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது பல கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. கட்டிடப்பணிகள் முழுவதும் நிறைவேறும் முன்னரே அவசர அவசரமாக அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் தலைமையில் புதிய தலைமைச்செயலகம் திறக்கப்பட்டது.
ஆனால் அதன்பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ரு ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக புதிய தலைமைச்செயலகத்தை பயன்படுத்தவில்லை. இந்த கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளது என கூறி, இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி ரகுபதியை கொண்டு, ஒரு நபர் கமிஷன் விசாரணைக்கு புதிய அரசு உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், ஏற்கெனவே கருணாநிதி நேரில் ஆஜராக வேண்டும் என்று ரகுபதி கமிஷன் கூறியது. கருணாநிதி இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்து, தனக்கு எதிரான விசாரணைக்கு தடை உத்தரவு பெற்றார்.
இந்நிலையில், ரகுபதி கமிஷன் ஸ்டாலின், துரைமுருகன் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தது. இந்த வழக்கில் ஆஜராக முடியாது என்று சம்மனை எதிர்த்து ஸ்டாலின், துரைமுருகன் ஆகிய இருவரும் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. ஸ்டாலின், துரைமுருகனை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.