ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எர்ணாவூரை சேர்ந்த வழக்றிஞர் எஸ்.முத்தையா என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ”திரைப்பட தணிக்கை துறையிடம் ‘யு’ சான்றிதழ் பெற்ற திரைப்படம், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை வளர்க்கும் விதமாக உள்ள திரைப்படம், பெரும்பான்மையான வசனங்கள் தமிழில் உள்ள திரைப்படம் ஆகியவைகளுக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையின்படி ஒருசில திரைப்படங்கள் வரிவிலக்கு பெற்றபோதும் திரைப்படத்தை காணவரும் பொதுமக்களிடம் தியேட்டர் உரிமையாளர்கள் வரியையும் சேர்த்துதான் வசூலிக்கின்றனர். இது ஒரு மிகப்பெரிய மோசடி ஆகும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கும் 2011 ஆம் ஆண்டு அரசாணைக்கு தடை விதித்து கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி உத்தரவிட்டது.
ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி தமிழக அரசு ‘கோச்சடையான்’ படத்துக்கு வரி விலக்கு அளித்து கடந்த 12 ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. வரி விலக்கு அளிக்கும் அரசாணைக்கு இந்த உயர் நீதிமன்றம் தடை விதித்து இருக்கும்போது, இதுபோன்ற வரி விலக்கு அளிக்க முடியாது. ஆனால், கோச்சடையான் படத்துக்கு எப்படி வரி விலக்கு வழங்கப்பட்டது? அதிகாரிகளின் இந்த செயல் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாகும் என்றும் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ”கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும். எனவே, திரையரங்கு உரிமையாளர்கள், கோச்சடையான் படத்தை பார்க்க வரும் பொதுமக்களிடம் இருந்து கேளிக்கை வரியை வசூலிக்கக் கூடாது.
கேளிக்கை வரி சேர்க்காமல், அரசு நிர்ணயம் செய்துள்ள டிக்கெட் கட்டணத்தை மட்டுமே திரையரங்கு உரிமையாளர்கள் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.