தமிழகத்தில் அரசு அலுவலகங்களிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை அகற்றக் கோரிய வழக்கில், 4 வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வைக்கப்பட்டிருப்பதாகவும், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் அரசு அலுவலகங்களில் இருக்கக்கூடாது என்றும் அந்த புகைப்படங்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் திமுக எம்.எல்.ஏ- டி.ஆர்.பி.ராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “ஜனநாயகத்தின் அடிப்படையில் ஆட்சிகள் நடைபெறவேண்டும். அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருப்பது சட்ட விரோதமாகும். இந்த புகைப்படத்தை அகற்றுவதுடன், இனிவரும் காலங்களில், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் புத்தகங்கள், பைகள், லேப்டாப் பைகள் ஆகியவற்றில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெறாமலும் தடுக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
இதனை தொடர்ந்து, “அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வைத்துள்ளது தொடர்பாக 4 வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்றும், இந்த மனுவை அரசு அதிகாரிகள் பரிசீலிக்கும்போது 8-11-2014 அன்று சட்டப் பேரவைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசு ஆணையையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.