கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடைக்கு தடை விதிக்க சென்னை நீதிமன்றம் மறுப்பு

வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடைக்கு தடை விதிக்க சென்னை நீதிமன்றம் மறுப்பு

kalingapattiதமிழகத்தில் தற்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் எடுத்துக்கொண்டுள்ள ஒரே பிரச்சனை பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கைதான். தமிழகத்தில் மதுவிலக்கு உள்பட எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும், அதிகளவில் ஓட்டுக்கள் வாங்கிக்கொடுக்கும் பிரச்சனை என்பதால் இந்த பிரச்சனையை அனைத்து எதிர்க்கட்சிகளும் போட்டி போட்டு கையில் எடுத்துள்ளன. இதுவரை ஆக்கபூர்வமான போராட்டங்களை மட்டுமே நடத்தி வந்த மதிமுக தலைவர் வைகோவும் இந்த கூட்டத்தில் இணைந்ததுதான் வேதனையான ஒன்றாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை மூட உத்தரவிடக் கோரி மதிமுக பொதுச் செயலர் வைகோவின் சகோதரரும் கலிங்கப்பட்டி ஊராட்சித் தலைவருமான வி.ரவிச்சந்திரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனுதாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை அமைக்க முடிவு செய்த போது, அமைக்கக்கூடாது என ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கடையால் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்படத் தடை விதிக்க வேண்டும். அக்கடையை மூட உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடும்போது, கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அக்கடை செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றனர்.

டாஸ்மாக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியசாமி வாதிடும்போது “கலிங்கப்பட்டியில் 12 ஆண்டுகளாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. அரசியல் உள்நோக்கம் காரணமாக இப்போது டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என மனுதாரர் கூறுகிறார். குடிப்பது ஒரு சமுதாயத்தில் உள்ள பெரிய பிரச்சினையாகும். மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே குடிப்பது குறையும். தேனூர், குன்றக்குடி கிராமங்களில் மக்கள் மது அருந்துவதில்லை.

மாநில அரசுக்கு நிர்பந்தம் அளிப்பதற்காகப் போராட்டத்தை நடத்துகின்றனர். மனுதாரர் மதிமுக பொதுச் செயலர் வைகோவின் சொந்த சகோதரர். வைகோவின் குடும்பத்தினர் புகையிலை பொருள்களை விற்பனை செய்யும் ஏஜெண்டாக உள்ளனர். இவர்கள் மதுவுக்கு எதிராகப் போராடுவது வியப்பாக உள்ளது என்றார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்த மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உள்துறை செயலர், நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் இந்த மனு மீதானவிசாரணையை வரும் 13-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும் இந்த அமர்வு கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்படுவதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply