வைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை: சென்னை ஐகோர்ட்

வைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை: சென்னை ஐகோர்ட்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் என்ற நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக கண்டனக் குரல்களும், ஆதரவுக் குரல்களும் வந்த வண்ணமாக இருக்கின்றன.

அந்த நிகழ்ச்சியில் தான் பேசியது யாரையேனும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்வதாக வைரமுத்து தெரிவித்தும், வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் சென்னை உள்பட பல இடங்களில் வைரமுத்துவுக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வைரமுத்துவின் கருத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி கவிஞர் வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

அவரது மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அதில் ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆராய்ச்சி கட்டுரையில் இருந்த கருத்தையே வைரமுத்து மேற்கோள் காட்டியுள்ளார். எனவே அது அவரது சொந்த கருத்தாக ஏற்றுக் கொள்ளமுடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளே இந்த பிரச்சனையை பெரிதாக்கி இருப்பதாக வைரமுத்து தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply