சென்னையில் 2020ஆம் ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு வருமா? திடுக்கிடும் தகவல்
வடகிழக்கு பருவமழை முடிவடையும் நிலையில் சென்னையில் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் பாதி மட்டுமே நிரம்பி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் 2020 ஆம் ஆண்டு கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் வருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
கடந்த 2018ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் சென்னையில் நீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகள் வறண்டு போயின. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்ததால் சென்னையில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது
ஆனால் இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழை கை கொடுத்ததால் ஓரளவுக்கு தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருந்தது. அதேபோல் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 7% அதிகமாக செய்துள்ளது
இருப்பினும் சென்னையை பொருத்தவரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 13 சதவீதம் மழை அளவு குறைந்து உள்ளதாகவும் வடகிழக்கு பருவமழை முடிவடையும் சூழ்நிலையில் சென்னைக்கு 80 சென்டி மீட்டர் வரை பெய்ய வேண்டிய மழை, தற்போது வரை 60 சென்டி மீட்டர் மட்டுமே செய்துள்ளதாகவும் தெரிகிறது.
ஆனால் அதே நேரத்தில் நிலத்தடி நீர்மட்டம் 4 முதல் 5 மீட்டர் வரை உயர்ந்துள்ளது ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகளில் 50% தண்ணீர் குறைவாக உள்ளதால் 2020ஆம் ஆண்டு சென்னை மக்கள் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கும் என தெரிகிறது. இருப்பினும் இடையில் கோடை மழை பெய்தால் தண்ணீர் பஞ்சம் ஓரளவுக்கு சரி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது