சென்னையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்க தயார் நிலையில் உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்தவுடன் ஜூலை முதல் வாரம் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் சென்னையில் முதன்முதலாக மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாலும், மெட்ரோ ரயில் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், அனைத்து தரப்பு பயணிகளையும் மெட்ரோ ரெயில் நோக்கி வரச்செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் மெட்ரோ ரயில் சேவையை பிரபலப்படுத்தவும் ஒரு வாரத்திற்கு இலவச பயணத்திற்கு அனுமதிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ரூ.20 ஆயிரம் கோடியில் நடைபெற்று வரும் சென்னை மெட்ரோ ரயில் பணிகளில் முதல்கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் ரயில் சேவை இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. தினசரி காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்றும், இதற்காக 9 மெட்ரோ ரெயில்கள் தயார் நிலையில் கோயம்பேடு பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அதிகாரி கூறும்போது, “சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையை பிரபலப்படுத்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதும் முதல் ஒரு வாரத்துக்கு பயணிகளை இலவசமாக அனுமதிக்கலாமா என்று பரிசீலினை செய்துள்ளோம். இது பற்றி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் இலவச பயணம் செல்ல, எத்தனை நாட்களுக்கு சலுகை அளிப்பது என்பது பற்றி தமிழக அரசு முடிவு செய்து அறிவிக்கும். இந்த சலுகை திட்டம் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், இந்தியாவில் முதன் முதலாக சென்னை பயணிகள் இலவசமாக மெட்ரோ ரெயிலில் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இதுவரை இதில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.