சென்னை ஓபன் டென்னிஸ் தொடக்க ஆட்டத்தில் குரோஷிய வீரர் வெற்றி

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் குரோஷிய வீரர் ஆன்ட் பவிச் வெற்றி பெற்றார்.
tennis
தமிழக அரசின் ஆதரவுடன் 20-வது ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் திருவிழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நேற்று மாலை கோலாகலமாக தொடங்கியது.

தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஒரு ஏ.டி.பி. போட்டியான இதில் வாவ்ரிங்கா உள்பட முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றில் களம் கண்ட 138-ம் நிலை வீரரான குரோஷிய வீரர் ஆன்ட் பவிச், 73-வது இடத்தில் இருக்கும் நிகோலஸ் அல்மாக்ரோவை (ஸ்பெயின்) எதிர்கொண்டார்.

2 மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்த இந்த ஆட்டத்தில் ஆன்ட் பவிச் 3-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் அல்மாக்ரோவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் போர்னா கோரிச் (குரோஷியா), மார்செல் கிரானோலர்ஸ்சை (ஸ்பெயின்) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் உலக தர வரிசையில் 44-வது இடத்தில் இருக்கும் போர்னா கோரிச் 7-6 (7-5), 2-6, 6-4 என்ற செட் கணக்கில் 84-வது இடத்தில் உள்ள கிரானோலர்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த போட்டி வருகிற 10-ந் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.

Leave a Reply