சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கியது. முதல் நாளில் வென்ற வீரர்கள் விபரம்
தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி. தொடர் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் தொடங்கியது.
முதல் ஆட்டமாக குரோஷியா வீரர் போர்னா கோரிச், தென் கொரியா வீரர் ஹியோன் சங் உடன் மோதினார். இந்த போட்டியில் குரோஷியா வீரர் போர்னா கோரிச் 3-6, 5-7 என்ற நேர்செட்டில் ஹியோன் சங்கிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
அதே போல் இன்னொரு ஆட்டத்தில் ரஷிய வீரர் டேனில் மெட்வதேவ் 6-3, 6-3 என்ற நேர்செட்டில் பிரேசில் வீரர் தியாகோ மோன்டீராவை வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் வீரர் ஸ்டீவ் டார்சிஸ் 6-2, 6-3 என்ற நேர்செட்டில் நிகோலா மெக்டிச்சை (குரோஷியா) வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆட்டம் ஒன்றில் இஸ்ரேல் வீரர் துடி செலா 6-2, 6-2 என்ற நேர்செட்டில் டாமிர் ஜூம்ஹர் (போஸ்னியா) புரட்டியெடுத்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இன்னொரு ஆட்டத்தில் சுலோவக்கியா வீரர் கோவலிக், போர்ச்சுகல் வீரர் கேஸ்டாவ் எலியாஸ்சை சந்தித்தார். இதில் கோவலிக் 6-7 (5-7) முதல் செட்டை இழந்தாலும், பின்னர் சுதாரித்து ஆடி அடுத்த 2 செட்களையும் 6 -4, 6-3 என்ற தனதாக்கி வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜர்ஜென் மெல்சர் (ஆஸ்திரியா)-ரென்ஜோ ஆலிவோ (அர்ஜென்டினா) ஜோடி 4-6, 7-6 (7-3), 11-9 என்ற செட் கணக்கில் ஆந்த்ரே பெஜிமான் (ஜெர்மனி)-யென் ஹூசன் லு (சீன தைபே) இணையை சாய்த்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.