போராட்டம் இலக்கை அடைந்துவிட்டது. அமைதியாக கலைந்து செல்லுங்கள். போலீசார் வேண்டுகோள்
சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த 7 நாட்களாக இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடி வருகின்றனர். ஜல்லிக்ட்டுக்கான அவசர சட்டம் இயற்றப்பட்டு இன்று முதல் நடைபெறும் சட்டமன்ற தொடரிலும் சட்டம் இயற்றப்பட உள்ளது. ஆனாலும் மாணவர்கள் பிடிவாதமாக ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் இலக்கை எட்டிவிட்டதால் உடனடியாக மெரீனாவில் இருந்து போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து செல்லும்படி காவல்துறையினர் இன்று அதிகாலை 4 மணிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்கக் கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்களும்,மாணவர்களும் ,பொதுமக்களும் கடந்த 17.01.2017 முதல் சென்னை மெரினா கடற்கரையில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளீர்கள்.இந்த போராட்டமானது மிகவும் கட்டுப்பாடுடனும்,அமைதியாகவும் பொதுமக்களுக்கும்,போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறுமின்றி நடைபெற்று வந்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் சென்னை பெருநகர காவல்துறையினருக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கி வந்துள்ளீர்கள்.தமிழக அரசின் சீரிய முயற்சியால் மக்கள் அனைவரும் விரும்பியபடி ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று (22-1-2017)நடைபெற்றுள்ளது.
போராட்டத்திற்கான குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் மெரினா கடற்கரையிலிருந்து உடனடியாக கலைந்து செல்லும் படி சென்னை பெருநகர காவல்துறை உங்களை கேட்டுக் கொள்கிறது. மேலும் எவ்வாறு அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தினீர்களோ அதே முறையில் காவல்துறையினருடன் ஒத்துழைத்து கலைந்து செல்லும்படி உங்களை கேட்டுக் கொள்கிறோம்.”
இவ்வாறு காவல்துறையின் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.