தொடர் கனமழையால் வெள்ளம் சூழ்ந்ததால் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. ஆனாலும், மெட்ரோ, பறக்கும் ரயில்களின் சேவை மட்டும் பயணிகளுக்கு கை கொடுத்தது.
சென்னை விமான நிலையம் டிச.6 வரை மூடல்
சென்னை விமான நிலையத்துக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் டிசம்பர் 6-ம் தேதி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் ஆகியவற்றின் காரணமாக சென்னை நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் சென்னைக்கு வரும் மற்றும் சென்னையில் இருந்து செல்லும் வெளியூர் பேருந்துகள், ரயில்களின் சேவை, விமான சேவை இன்று முற்றிலும் முடங்கியது.
பேருந்து சேவை நிறுத்தம்
மாநகர பேருந்துகள் சேவை பல இடங்களில் நிறுத்தப்பட்டன. பல்லாவரம், கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், கோயம்பேடு ஆகிய பகுதிகளின் பேருந்து நிலையங்களில் பயணிகள் உரிய இடத்துக்கு சென்று விடலாம் என்ற நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், பேருந்து சேவை இல்லாததால் வீட்டுக்கும் செல்ல முடியாமல் தவித்தனர். ஒரு கட்டத்தில் நிலைமையைக் கண்டு கொதித்தெழுந்து சாலை மறியல் செய்தனர். அதற்குப் பிறகு காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியதும், மறியலைக் கைவிட்டனர்.
ரயில் சேவை நிறுத்தம்
தண்டவாளங்களில் தேங்கிய மழை நீர் காரணமாக செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன.
சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேர வேண்டிய ரயில்கள் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன. சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் வரை செல்லும் புறநகர் ரயில்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
சென்னை எழும்பூரிலிருந்து தாம்பரம் வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் எல்லா ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் தென்மாவட்டங்களில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டு தாம்பரம் வழியாக சென்னைக்கு வரும் ரயில்களும் இயங்கவில்லை. இதனால் தென்மாவட்டங்களுடனான ரயில் போக்குவரத்து தொடர்பும் நின்று போனது.
விமான நிலையம் மூடல்
சென்னையிலிருந்து திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு விமானம் மூலம் செல்ல திட்டமிட்டவர்களாலும் பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. விமான நிலைய ஓடுபாதையில் தேங்கிய மழை நீரின் காரணமாக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டது. வியாழக்கிழமை காலை வரை அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாகவும், விமான நிலையம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கிடைத்தத் தகவல்படி, சென்னை விமான நிலையத்துக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் டிசம்பர் 6-ம் தேதி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கை கொடுத்த மெட்ரோ, பறக்கும் ரயில்கள்
கனமழையில் மாநகர பேருந்து, மின்சார ரயில் சேவை முடங்கிய நிலையில், மக்கள் மெட்ரோ மற்றும் பறக்கும் ரயில்களில் அதிக அளவில் பயணம் மேற்கொண்டனர். கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் பயணிகள் நீண்ட நேரம் நின்று டிக்கெட் பெற்று மெட்ரோ, பறக்கும் ரயில்களில் பயணித்து அலுவலகம் சென்றனர்.
ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூல்
கடுமையான மழை மற்றும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை காரணம் காட்டி ஆட்டோ ஓட்டுநர்களும், கால்டாக்சிகளும் பல மடங்கு உயர்த்தி கட்டணம் வசூலிக்கின்றனர்.