நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம் இன்று முதல் வெளியாகும் என நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை சத்யம் தியேட்டர் மீது மர்ம கும்பல் ஒன்று உருட்டுக்கட்டை தாக்குதல் மற்றும் பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதால் மீண்டும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணா சாலை போலீஸார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள சத்யம் தியேட்டர் மற்றூம் ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் தியேட்டர் ஆகிய தியேட்டர்களில் தீபாவளி தினத்தில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம் வெளியாகும் என நேற்று இரவு அறிவிக்கப்பட்டிருந்தது. சத்யம் திரையரங்கில், விஜய் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்றிரவு 11 மணிக்கு மேல் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் திரையரங்க வளாகத்திற்குள் நுழைந்த சில மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசியதுடன், கத்தி படத்தின் பேனர்களையும் கிழித்தெறிந்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதுடன், மர்ம நபர்கள் பற்றி அறிய திரையங்கில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.
அதை தொடர்ந்து போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று, சந்தேகத்தின்பேரில் 5 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், ராயப்பேட்டையில் உள்ள உட்லாண்ட்ஸ் திரையரங்கு வளாகத்தின் மீதும் நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, கத்தி திரைப்படம் வெளியாக உள்ள உதயம் உள்ளிட்ட திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.