நெரிசலும் போக்குவரத்து இரைச்சலும் மிகுந்த சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில், கம்பீரமான கோபுரத்துடனும் அழகிய பிராகாரங்களுடனும் அமைந்திருக்கிறது ஸ்ரீகங்காதீஸ்வரர் கோயில்.
புராதன – புராணப் பெருமைகள் கொண்ட இந்த ஆலயத்தை, இக்ஷ்வாகு வம்சத்துடன் தொடர்பு கொண்ட தலம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள். ரகு குலம் என்று புராணங்கள் போற்றும் இந்த வம்சத்தில்தான் ஸ்ரீராமனும் அவதரித்தார். அவருடைய முன்னோர்களில் ஒருவர் சகரன். ஒருமுறை, இவர் மிக பிரமாண்டமாக அசுவமேத யாகத்தைத் தொடங்கினார். இதனால் அச்சமுற்ற இந்திரன், யாகத்தின் இறுதிநாளன்று யாகக் குதிரையைக் கவர்ந்து சென்று, கபில முனிவரின் ஆசிரமத்தின் அருகில் கட்டிவிட்டுச் சென்றான்.
குதிரையைக் காணாமல் திகைத்த சகரன், அதைக் கண்டுபிடித்து வருமாறு தன் 60,000 புதல்வர்களையும் அனுப்பி வைத்தார். அப்படி, குதிரையைத் தேடியலைந்த சகர மைந்தர்கள், கபிலரின் ஆஸ்ரமத்தில் குதிரையை கண்டனர். அங்கே அவர்களின் செயல்பாடுகளால், கபில முனிவரின் தவம் கலைந்தது. இதில் கோபமுற்ற கபில முனி, அவர்களை சபித்தார். அதன் விளைவாக சகர மைந்தர்கள் எரிந்து சாம்பலானர்கள்.
காலங்கள் ஓடின. சகரனின் வம்சத்தில் பகீரதன் தோன்றினார். சிறந்த சிவபக்தரான பகீரதன், தன் முன்னோரை கடைத்தேற்ற விரும்பினார். இவருடைய கடும் தவப்பயன் காரணமாக, கங்கை நல்லாள் பூமிக்கு வந்ததும், பகீரதனின் முன்னோர் கடைத்தேறியதும் நாமறிந்த கதையே.
முன்னோர் நற்கதி அடைந்தது கண்ட பகீரதன் நெகிழ்ந்தார். அதன் தொடர்ச்சியாக ஆலயம் அமைத்து சிவனாரை வழிபட்டார். அவ்வாறு அவர் வழிபட்ட தலமே, புரசைவாக்கம் ஸ்ரீகங்காதீஸ்வரர் கோயில். இந்தக் கோயில் குறித்து இன்னொரு கதையும் உண்டு.
அதாவது, தன் அழகில் கர்வம் கொண்ட பகீரதன், தன்னைச் சந்திக்க வந்த நாரதரை அவமதிக்க, அதில் ஆத்திரம் கொண்ட நாரதர், தோல் வியாதியில் அவதிப்படும் படி பகீரதனுக்கு சாபமிட்டார். தன் தவற்றை உணர்ந்த பகீரதன், நாரதரிடம் மன்னிப்புக் கேட்க, ‘108 சிவலிங்கங்களை 108 இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபடு.விமோசனம் பெறுவாய்’ என நாரதர் வழிகாட்டினார்.
அதன்படியே 107 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் பகீரதன்; 108வது இடம் தேடி அலையும்போது, சிவனாரே கனவில் வந்து, புரசை வனத்தில் பிரதிஷ்டை செய்ய அருளினார். அதன்படி, அங்கே பகீரதனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்றளவும் அனைவராலும் வணங்கப்படுகிறார் புரசைவாக்கம் ஸ்ரீகங்காதீஸ்வரர். இங்கே உள்ள கிணற்றில், கங்கையே வாசம் செய்வதாக ஐதீகம். கோயிலின் சாந்நித்தியத்தை உணர்ந்த இரண்டாம் குலோத்துங்க சோழன், கோயிலைப் புதுப்பித்து, திருப்பணிகளுக்கு ஏராளமான நிதிகளை வழங்கினான் என்கிறது ஸ்தல வரலாறு.
கோயிலுக்கு திருக்குளம் உள்ளது. ஆனால், பராமரிப்பு இன்றி வறண்ட நிலையில் பரிதாப மாகக் காட்சியளிக்கிறது. பிராகாரப் பகுதியில் அழகிய நந்தவனம் அமைக்கப்பட்டு, சிறப்புறப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில், 27 நட்சத்திரத் துக்கு உரிய விருட்சங்களும் வளர்க்கப்படுகின்றன.
இங்கே, சோமாஸ்கந்தர், ஊன்றீஸ்வரர், பைரவர், தட்சிணாமூர்த்தி, குருந்த மல்லீஸ்வரர், பாணலிங்கம், வைத்தீஸ்வரர் என ஏழுவிதமான வடிவங்களில் காட்சி தருகிறார் சிவனார். ஸ்ரீகுருந்தமல்லீஸ்வரருக்கு பக்தர் களே அபிஷேகித்து வழிபடலாம். ஸ்ரீபிரம்மா, ஸ்ரீசத்ய நாராயண பெருமாள் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். அன்னை ஸ்ரீபங்கஜாம் பாள், கேட்ட வரம் தரும் கற்பக விருட்சமாக அருள்கிறாள்.
காசிக்கு நிகரான தலம் என்று போற்றப்படும் கங்காதீஸ்வரர் தலத்தை வணங்கி, சகல வளங்களும் பெறுவோம்!