சாம்பியன் லீக் 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் கோப்பை வென்றது. கடைசி வரை போராடிய கொல்கத்தா அணி ஏமாற்றம் அடைந்தது.
நேற்று பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, கொல்கத்தாவை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. சென்னை அணியின் பந்துவீச்சாளர் நேகியின் அபார பந்துவீச்சால் கொல்கத்தா அணியின் ஐந்து விக்கெட்டுக்கள் சரிந்தன. இருப்பினும் காம்பீர் ஓரளவுக்கு சமாளித்து 80 ரன்கள் எடுத்தார்.
181ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஓவரிலேயே ஸ்மித் விக்கெட்டை இழந்தாலும் பின்னர் சுதாரித்து ஆடியது. மூன்றாவதாக களமிறங்கிய சுரேஷ் ரெய்னா நேற்று மிக அபாரமாக விளையாடி 8 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடித்தார். அவர் மொத்தம் 109 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கேப்டன் தோனி 23 ரன்களும், மெக்கல்லம் 39 ரன்களும் எடுத்தனர். இறுதியில் சென்னை அணி 18.3 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா செஞ்சுரி அடித்தபோதிலும் நேகி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். சுரேஷ் ரெய்னாவுக்கு தொடர்நாயகன் விருது கிடைத்துள்ளது.