உரிய அனுமதி பெற்றே காட்டுக்குள் அனுப்பினோம்: டிரெக்கிங் கிளப் விளக்கம்
தேனி மாவட்டம் குரங்கணியில் கடந்த 11-ம் தேதி மாலை காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் டிரெக்கிங் பயிற்சி மேற்கொண்ட 36 பேர் சிக்கிக்கொண்டனர். இதில், தற்போது வரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிரெக்கிங் சென்றவர்கள் சென்னையில் உள்ள மலையேற்ற பயிற்சி கிளப் மூலமாக சென்றிருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், அந்த பயிற்சி கிளப் இன்று தனது விளக்கத்தை அளித்துள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:-
காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். பெண்கள் தினத்தை ஒட்டி இரண்டு நாள் டிரெக்கிங் பயிற்சியை அருண் மற்றும் விபின் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். 27 பேர் கொண்ட குழு ஒரு உள்ளூர் வழிகாட்டியுடன் சனிக்கிழமை காலை குரங்கணி அடிவாரத்தில் வனத்துறையினரிடம் உரிய அனுமதிச்சீட்டு பெற்றுள்ளனர். குரங்கணியில் இருந்து கொல்லுகுமலை டாப் பகுதிக்கு செல்லும் போது அங்கு தீ எரிவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
மாலை கொல்லுகுமலை சென்று அன்று இரவு அங்கேயே தங்கியுள்ளனர்.
ஞாயிறு அன்று கீழே இறங்க தொடங்கியுள்ளனர். அப்போது, அடிவாரப்பகுதியில் காய்ந்த புற்களை அங்குள்ள விவசாயிகள் தீ வைத்துள்ளனர். காற்று அழுத்தம் குறைவாக இருந்ததன் காரணமாக தீ வேகமாக காட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. தீவிபத்தில் சிக்கி தப்பித்தவர்கள் தெரிவித்தபடி, அங்கு ஏற்பட்ட புகையில் இருந்து தப்பிக்க குறைந்த நேரமே இருந்துள்ளது. அப்போது நாங்கள் உள்ளூர் வழிகாட்டியுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அங்குள்ளவர்கள் செல்போன் மூலம் அளித்த தகவலில் துல்லியமான பகுதியை தெரிவிக்கவில்லை.
இதனை அடுத்து, நாங்கள் வனத்துறையுடன் தொடர்பு கொண்டோம். மலையேற்ற குழுவில் இருந்த அருண் மற்றும் விபின் 7 வருட அனுபவம் கொண்டவர்கள். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் அவர்கள் மலையேற்ற பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களின் இழப்பு எங்களால் தாங்க முடியாதது.
மலையேற்ற பயிற்சி என்பது ஒருவர் அல்லது இரண்டு பேரால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. சென்னை டிரக்கிங் கிளப் இதற்காக எந்த தொகையையும் பெறுவது இல்லை.
இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.