கலைக் கல்லூரிகளில் 600 இடங்கள் அதிகரிக்க சென்னை பல்கலை அனுமதி
கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் தயக்கம் காட்டி வருவதும் அதற்கு பதிலாக கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விருப்பம் தெரிவித்தும் உள்ளது குறித்து அவ்வப்போது வரும் செய்திகளை பார்த்து வருகிறோம். இந்நிலையில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ மாணவிகள் போட்டி போடுவதால் அந்த கல்லூரிகளில் இடம் கிடைப்பது அரிதானதாக உள்ளது. அதனால் கலை அறிவியல் கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டு வந்தன.
இந்த கோரிக்கைகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு, சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளில் 600 இடங்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் பா.டேவிட் ஜவகர் கூறியதாவது:
கலைக் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் அதிகபட்சம் 70 இடங்களுக்கும் இளம் அறிவியல் (பிஎஸ்சி) படிப்புகளுக்கு அதிகபட்சம் 50 இடங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும். மாணவர்களிடம் இருந்து அதிகப்படியான விண்ணப்பங்கள் வரும்போது ஏற்கெனவே உள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சில அடிப்படை விதிமுறைகள் உள்ளன. கல்லூரியில் கட்டிடம், ஆய்வகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள், தேவையான ஆசிரியர்கள் ஆகியவற்றை ஆய்வுசெய்து அனுமதி அளிக்கப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டு இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகள் அனுமதி கோரியிருந்தன. அதன் அடிப்படையில், விதிமுறைகள் ஆய்வுசெய்யப்பட்டு இதுவரையில் 600 இடங்களை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளிடம் இருந்து இன்னும் கோரிக்கைகள் வர வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.