நேற்று சென்னையில் நடைபெற்ற விறுவிறுப்பான ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்க மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி நேற்று மிகவும் நிதானமாகவே ஆடியது. கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாத சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 134 ரன்கள் மடுமே எடுத்தது. டீ பிளஸ்ஸிஸ் 29 ரன்களும், ஸ்மித் 25 ரன்களும் எடுத்தனர்.
135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே கேப்டன் காம்பீர் அவுட் ஆனார். இதையடுத்து கொல்கத்தா அணியின் விக்கெட்டுக்கள் போதிய இடைவெளியில் வீழ்ந்து கொண்டே இருந்தது. கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்திருந்த கொல்கத்தா அணி 14 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி பந்தில் சிக்சர் அடித்தால் ‘டை’ என்று இருந்த நிலையில் 4 ரன்கள் மட்டுமே கடைசி பந்தில் அடிக்கப்பட்டதால் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
சென்னை அணியின் பிராவோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.