இலங்கையின் கொழும்பு நகர விடுதியில் கணவருடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சென்னை பெண் 8 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் அருகே உள்ள கஜுவாகா என்ற இடத்தை சேர்ந்தவர் பிரிதிவிராம் (வயது30). இவரது மனைவி மகாலட்சுமி (28), சென்னையை சேர்ந்தவர். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இருவரும் மலேசியாவில் பணிபுரிந்து வந்தனர்.
மார்ச் மாதம் 27-ந்தேதி அவர்கள் இலங்கை சென்றனர். கொழும்பு நகரில் வெள்ளவத்தை என்ற இடத்தில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். தினமும் வெளியில் சென்றுவிட்டு இரவு விடுதிக்கு திரும்பிவந்தனர். 1-ந்தேதி அவர்கள் வெளியில் சென்றுவிட்டு இரவு 7 மணியளவில் விடுதிக்கு திரும்பினர். அதன்பின்னர் அவர்கள் தங்கியிருந்த அறைக்கதவு திறக்கப்படவில்லை.
மறுநாள் காலை அதிக நேரமாகியும் அவர்களது அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் வெள்ளவத்தை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அறை கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்ததால், போலீசார் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கே கட்டிலில் இருவரும் பிணமாக கிடந்தனர். அருகில் ஒரு குளிர்பான பாட்டில் கிடந்தது. அவர்களது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், கொலையா? தற்கொலையா? என்பது பிரேதபரிசோதனை முடிந்த பின்னர் தான் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
அவர்களது பாஸ்போர்ட்டில் உள்ள முகவரியை வைத்து விசாகப்பட்டினத்துக்கும், சென்னைக்கும் அந்த தம்பதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொழும்பு விரைந்துள்ளனர். உறவினர்கள் வந்து சேர்ந்த பின்னர் தான் பிரேதபரிசோதனை நடைபெறும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
மகாலட்சுமியின் வயிறு பெரிதாக இருந்ததாகவும், அவர் 8 மாத கர்ப்பிணியாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அறையில் மலேசிய நாட்டின் 10 ரிங்கிட் நாணயம் மட்டுமே இருந்துள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இலங்கை வந்த நாளில் இருந்து சூதாட்ட விடுதிகளுக்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டதில் தங்களது பணம் முழுவதையும் இழந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பிரேதபரிசோதனைக்கு பின்னர் அவர்களது உடல்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.