சென்னை பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரு ஆண் மற்றும் மூன்று பெண் குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த காயத்ரி என்ற 25 வயது பெண் இரண்டாவது முறையாக கர்ப்பமுற்று, பிரசவத்திற்காக கடந்த வாரம் சென்னை கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று பிரசவ வலி வந்ததால் மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர். அவருக்கு நார்மல் டெலிவரியாக நான்கு குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன. இதனால் மருத்துவர்கள் உள்பட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

ஒரு தாய்க்கு நான்கு குழந்தைகள் பிறப்பது என்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாகும். 70 லட்சத்திற்கு ஒரு தாய்க்குத்தான் இவ்வாறு நான்கு குழந்தைகள் பிறக்கும். உலகிலேயே இதுவரை 4000 தாய்மார்கள்தான் நான்கு குழந்தைகளை ஒரே நேரத்தில் பெற்றெடுத்துள்ளனர். இதற்கு முன்னர் இதே மருத்துவமனையில் கடந்த 20ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1984ஆம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது. இது இந்த மருத்துவமனைக்கு இரண்டாவது முறை.

நான்கு குழந்தைகளை பெற்ற காயத்ரியும், குழந்தைகளும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆண் குழந்தை 1.9கிலோ எடையும், மற்ற மூன்று பெண் குழந்தைகளும் முறையே 1.5கி, 1.4கி, 1.3கி எடையும் இருந்தது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply