சென்னைக்கு வருமா மலிவு விலை வீடுகள்?

malivuvilai_2355988g

இந்திநகரப் பகுதிகளில் மக்கள் தொகை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டே போகிறது. கடந்த மூன்று பத்தாண்டுகளில் இந்திய நகர மக்கள் தொகை மூன்று மடங்காக உயர்ந்திருக்கிறது. 109 மில்லியனாக இருந்த நகர மக்கள் தொகை, 2011-ல் 377 மில்லியனாக உயர்ந்தது. 2030-ம் ஆண்டு இந்த மக்கள் தொலை 600 மில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மக்கள் தொகை ஏற்றத்துக்குத் தக்கவாறு வீட்டு வசதிகள் உயரவில்லை. 12-வது ஐந்தாண்டுத் திட்டக் காலகட்டத்தில் வீட்டு வசதிக்கான பற்றாக்குறை 18.78 மில்லியன். அதாவது பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்கும் குறைந்த வருவாய் கொண்டவருக்குமான வீட்டு வசதிப் பற்றாக்குறை 95 சதவிகிதம் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக நெருக்கடி உள்ள நகரங்களில் முக்கியமான நகரமாகச் சென்னையும் இருக்கிறது. சென்னைக்கு நாள் தோறும் பிழைப்பு தேடி வருபவர்களால் மக்கள் தொகையும் மிக விரைவாக உயர்ந்து வருகிறது. தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத் திட்டம் இருந்தாலும் நகர நெருக்கடியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

வடசென்னையிலும் மத்திய சென்னையிலும் அதிகமாக இருக்கும் குடிசைப் பகுதிகளில் மிகச் சிறிய இடத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வசிக்க நேரிடுகிறது. அவர்கள் வீட்டின் கழிவுகள் வெளியேற முறையான கழிவு நீர்த் திட்டம் இல்லை.

அங்கேயே நீர் தேங்கி புதிய புதிய நோய்க்கு ஆளாகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இது போன்ற பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ளவர்களுக்கு வீட்டு வசதி செய்துதருவது அரசின் கடமை. அதற்காகப் பல திட்டங்களை அரசு தீட்டிவருகிறது. அவற்றுள் ஒன்றுதான் ‘மலிவு விலை வீடுகளுக்கான கூட்டுத் திட்டம்.’

malivuvilai1_2355987g

நகரத்தில் உள்ள நெருக்கடியைச் சரிசெய்யும் பொருட்டு ஜவஹர்லால் நேரு நகரப் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் வீட்டு வசதியை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டது. அதன் விளைவுதான், ‘மலிவு விலை வீடுகளுக்கான கூட்டுத் திட்டம்’ (Affordable Housing in Partnership -AHP). குடிசை வீடுகளை மாற்றும் ராஜீவ் அவாஸ் யோஜனா (Rajiv Awas Yojana) திட்டத்துடன் இது இணைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் வீட்டு வசதியை மேம்படுத்தத் தனியார் ஒத்துழைப்பும் கிடைக்கிறது. மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் வாடகைக் குடியிருப்புகளை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. ஏனெனில் 2011-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 27.5 சதவிகிதத்தினர் வாடகை வீடுகளையே வசிப்பிடமாகக் கொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டு ஒத்துழைப்பில் நாட்டில் முதன்முறையாக பெங்களூருவில் மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மத்திய அரசு 56.07 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதில் 992 குடியிருப்புகளை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 704 வீட்டுப் பணிகள், நிறைவடைந்திருக்கின்றன. மீதிப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்கும், குறைந்த வருவாய் பிரிவினருக்குமான வீடுகள் ஒவ்வொன்றுக்கும் அரசு 75 ஆயிரம் அளிக்கிறது. மீதிப் பணத்தை வீடு ஒதுக்கப்படும் நபர் கொடுக்க வேண்டும்.

malivuvilai11_2355986g

மேலும் அரசு மற்றும் அரசு-தனியார் கூட்டில் வளரவிருக்கும் இந்தத் திட்டத்தில் பலதரப்பட்ட சமூக நிலையினருக்கான வீடுகள் அமையவுள்ளன. பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள பிரிவினர், குறைந்த வருவாய் உள்ளோர், நடுத்தர வர்க்கத்தினர், உயர் நடுத்தர வர்க்கத்தினர் எனப் பல பிரிவினருக்கும் ஏற்றார்போல் வீடுகள் உருவாக்கப்பட உள்ளன. பொருளாதார நலன் கருதி வணிகரீதியிலான கட்டிடங்களும் உருவாக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.

மேலும் இந்தத் திட்டத்தில் வீடு வாங்கும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய, குறைந்த வருவாய் உள்ள பிரிவினர்களுக்கு அரசு 5 சதவீதம் வரை கடன் மானியம் அளிக்கவுள்ளது. பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் சென்னை மட்டுமல்லாது இந்திய நகரங்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்திசெய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply