ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்,சமந்தா நடிப்பில் உருவாகி, எதிர்வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நண்பர் என்பதால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கத்தி படத்திற்கு எதிராக போராடி வரும் தமிழ் அமைப்பின் சில உறுப்பினர்கள் திடீரென இயக்குனர் சேரன் மீதும், நடிகை சினேகா மீதும் ஃபேஸ்புக் மூலம் தாக்குதல் தொடுத்துள்ளனர். இதற்கு காரணம் கத்தி படத்தின் தயாரிப்பாளர்தான் சேரன், சினேகா நடித்த ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற திரைப்படத்தை தயாரித்தவர் என்பதால்தான் இந்த தாக்குதல் என்று தெரிய வருகிறது.
பிரபல இயக்குனர் கரு.பழனியப்பன் இயக்கிய “பிரிவோம் சந்திப்போம்” என்ற திரைப்படத்தை ஞானம் புரடொக்ஷன்ஸ் என்ற பெயரில் கத்தி படத்தின் தயாரிப்பாளர் தயாரித்தார். பின்னர் அவர் ஞானம் புரடொக்ஷன்ஸ் என்ற பெயரை லைகா புரடொக்ஷன்ஸ் என்று பெயரை மாற்றி “கத்தி”யை தயாரித்து வருகிறார்.
எனவே ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரை முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் நுழைய அனுமதித்தவர் சேரன்தான் என்று தமிழ் அமைப்பினர் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி அந்த தயாரிப்பாளருடன் சினேகாவை தொடர்பு படுத்தி அருவருப்பான கருத்தை சிலர் பதிவு செய்து வருவது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் சேரன் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். பிரிவோம் சந்திப்போம் படம் வெளிவரும்போது தனக்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்றே தெரியாது என்றும், அந்த படத்தில் நான் ஒரு நடிகன் மட்டுமே என்றும் கூறியுள்ளார்.
மேலும் சினேகா குறித்து அருவருப்பாக கருத்து தெரிவிக்கும் முன்னர் அவரை உங்களுடைய தங்கையின் இடத்தில் வைத்து நினைத்து பார்த்து அதன்பின்னர் கருத்து தெரிவிக்கவும் என்றும் கூறியுள்ளார்.
பெண்களை தெய்வம் போல நினைத்து வாழ்ந்த பிரபாகரன் தம்பிகள் இதுபோன்ற கீழ்த்தரமான கருத்துக்களை கூறலாமா? என்று சேரன் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.